கேமரா காட்டி கொடுத்தாலும் அபராதம் வசூலிப்பதில் தொடரும் சிக்கல்கள்:

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை அதிநவீன கேமரா காட்டி கொடுத்தாலும் அபராதம் வசூலிப்பதில் சிக்கல்கள் தொடர்கின்றன. கோவையில் அவிநாசி சாலை, லட்சுமி மில் சிக்னல், உக்கடம், குனியமுத்தூர், பெரியகடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து விதிமீறலான சிக்னல் விழுவதற்குள் வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்வது, அதிவேகமாக ஓட்டுவது உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. இந்த கேமராக்கள் இரவு நேரத்திலும் மிக துல்லியமாக வாகன பதிவெண்ணை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இதனையடுத்து போலீசார் வாகன எண்ணை வைத்து உரிமையாளரின் வீட்டு விலாசத்தை கண்டுபிடித்து அங்கு சென்று அபராதம் வசூலித்து வந்தனர். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பலர் வாகனத்தை இரண்டாவதாக வாங்கினால் தங்களுடைய பெயருக்கு பதிவெண்ணை மாற்றுவது கிடையாது. இதனால் பதிவெண்ணை வைத்து முகவரி கண்டுபிடித்து போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றால் அந்த வாகனம் தன்னுடையது இல்லை என்றும், வேறொருவருக்கு விற்று பல நாட்கள் ஆகிறது என்றும் பதில் வருகிறது. இல்லையென்றால் வேலைக்கு சென்றுவிட்டார்கள். இரவுதான் வருவார்கள் என்றும், வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள் என்றும் பெரும்பாலானோர் கூறுகின்றனர். இதனால் அபராத தொகையை வசூலிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறியதாவது:- வாகன விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க அபராத ரசீது அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஆ.சி. புத்தகத்தில் உள்ள செல்போன் எண்ணுக்கு அபராத தொகைக்கான விவரத்தை எஸ்.எம்.எஸ்.சில் அனுப்புவார்கள். வாகன ஓட்டிகள் ஆன்லைனில் அபராத தொகையை செலுத்தலாம். செலுத்த தவறும் பட்சத்தில் இன்சூரன்ஸ் புதுப்பிக்க செல்லும்போது முழுமையான அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும். மேலும் வாகனத்தை வேறு ஒருவருக்கு விற்பது, பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும்போது அபராத தொகையை செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதன் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் அபராத தொகையை செலுத்த முடியாமல் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.