முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.

இந்திய மக்கள் தொகையில் முதியோர்களின் விகிதம் 12.5 சதவீதமாக 2026-ல் அதிகரிக்கும் என்றும், 20 சதவீதமாக 2050-ல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், வீட்டு கவனிப்பு மற்றும் வீடுகளில் வலி நிவாரண சிகிச்சை அளிக்கும் முறைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியா அதற்கு தயாராக உள்ளதா? ஹெல்ப்பேஜ் இந்தியாவின் 2019 ஆண்டறிக்கை, இந்தியா ஒரு 'நரை சுனாமியை' சந்திக்க உள்ளது என்கிறது. முதியோர்களில் பெரும்பான்மையோர் வறுமையில், உடல்நல குறைவுகளுடன், புறக்கணிப்பு மற்றும் ஏச்சு பேச்சுகளை எதிர்கொண்டு வாழ்கின்றனர். இந்திய மாநிலங்களில், 13.5 சதவீத முதியோர் மக்கள் தொகையுடன் கேரளா முதல் இடத்திலும், 11 சதவீத முதியோர் மக்கள் தொகையுடன் இமாச்சலபிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளன. 10 சதவீத முதியோர்களை (60 வயதிற்கும் மேற்பட்டவர்கள்) கொண்ட தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. மொத்த முதியோர் எண்ணிக்கை அடிப்படையிலும், 60 லட்சம் முதியோர்களை கொண்டு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 1.2 கோடி முதியோர்களை கொண்ட உத்தரபிரதேசம் முதல் இடத்திலும், 86 லட்சம் முதியோர்களுடன் மராட்டியம் 2-வது இடத்திலும் உள்ளன. பெரு நகரங்களில் எட்டு சதவீதத்துடன் சென்னை 2-வது இடத்தில், கொல்கத்தாவிற்கு (10 சதவீதம்) அடுத்து உள்ளதாக தேசிய மருத்துவ அறிக்கை 2018 கூறுகிறது. ஏறக்குறைய 71 சதவீத முதியோர்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் விதவைகள் ஆவர். இவர்களில் சுமார் பாதி பேர், சமூகத்தின் கீழ் தட்டுகளை சேர்ந்தவர்கள். சவால்கள் இந்தியாவில் உள்ள முதியோர்கள் பலரும் முதியோர் இல்லங்களில் வாழ விரும்புவதில்லை. வீடுகளில் குடும்பத்தினரால் பேணப்படவே விரும்புகின்றனர். பாரம்பரியமான குடும்ப அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களினால் இதை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார முன்னேற்றத்திற்காக வேலை தேடி செல்லும் இளம் குடும்ப உறுப்பினர்களுக்கு, முதிய குடும்ப உறுப்பினர்கள் ஒரு பாரமாக மாறிவிடுகின்றனர். வீடுகளில் முதியவர்களை பேணுவதற்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், பயிற்சி அளிக்கப்பட்டவர்களை கொண்டு முதியவர்களை அவர்களின் வீடுகளில் கவனித்துக்கொள்ளும் சேவைகளை பல அமைப்புகள் தொடங்கி உள்ளன. “ஓட்டுனர்கள் அல்லது தோட்டக்காரர்கள் போன்ற இதர பணியாளர்களை கொண்டு முதியவர்களை பராமரிக்கும் போக்கு பரவலாக உள்ளது. வெளியாட்களை வீட்டிற்குள் அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றனர்” என்கிறார் வின்னேஜ் என்ற முதியோர் சேவை நிறுவனத்தின் அருண் வர்மா. பல இதர அம்சங்களும் இதில் வெளிப்படுகின்றன. தமிழ் பேசும் நபர்கள், சொந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சேவைகளுக்கான கட்டணங்களுக்கு தமிழகத்தில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொதுவாக அடிப்படை பராமரிப்பு பயிற்சி பெற்ற (செவிலியர் பயிற்சி அல்ல) வீட்டு கவனிப்பு அளிப்பவர்கள், மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை, உணவு மற்றும் உறைவிடத்துடன் கேட்கின்றனர். நோயாளிகளுக்கான செவிலியர் சேவைகளுக்கு மாதம் ரூ.24,000 வரை ஆகிறது. “முதியோர் பராமரிப்பை இலவசமாக அளிக்க முடியாது. முதியோர் சேவையை ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட, ஊதியம் பெறும் வேலையாக மாற்ற விரும்புகிறோம். ஊதியம் அளிக்காமல், 22 வயதுடையவர்களை இந்த வேலைக்கு எப்படி ஈர்க்க முடியும்?” என்று கேட்கிறார் வர்மா. வெளியாட்களுடன் இடத்தை பகிர்ந்து கொள்ள விருப்பமின்மை, சில பணியாளர்கள் காட்டும் அலட்சியம், உணவு, தொலைக்காட்சி பார்க்கும் நேரம், ஓய்வுநேரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை அதீதமாக கோருதல் போன்றவை வெளியாட்களை வேலைக்கு அமர்த்த பலரும் தயங்க காரணங்களாகும். “வீட்டு கவனிப்பு பணியாளர்களின் குடும்ப பின்னணி மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் அவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்” என்கிறார் டி.டி.எஸ். மனிதவள மையத்தை சேர்ந்த டி.டி.எஸ்.மோகன். முதியோர் பராமரிப்பாளர்களை முறையாக நடத்தாமல், வீட்டு வேலைக்காரர் போல நடத்தி, வீட்டு வேலைகளை செய்ய சொல்லும் போது பிரச்சினைகள் உருவாகிறது என்கிறார் மோகன். போர்டியா மெடிக்கல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வைபவ் திவாரி “வளர்ந்த நாடுகளில் உள்ள மருத்துவமனை படுக்கை விகிதங்களைப் போல் 8-ல் ஒரு பங்கு தான் இந்தியாவில் உள்ளது. இந்த சூழலில், வீட்டு பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகிறது” என்கிறார். போர்சியா நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு இரு வகைப்படுகிறது மருத்துவ மேலாண்மை மற்றும் உடல் நலம் பேணுதல். இந்தியாவில் 2050-ல் 60 வயதிற்கும் அதிகமானவர்களின் எண்ணிக்கை 60 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கணிசமானவர்களுக்கு தனிப்பட்ட மருத்துவ மேலாண்மை மற்றும் உதவிகள் தேவைப்படும். போர்டியாவில் 3,300 மருத்துவ சேவை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 21 நகரங்களில் செயல்படுகிறது. குடும்பத்தினரின் ஆதரவு அல்லது பராமரிப்பு பணியாளர்களின் ஆதரவை நாடும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. மகன், மகள்கள் அருகே உள்ள நிலையில், முதியோர் இல்லங்களில் வசிக்க தயங்குவதால், பல நெருக்கடியான சூழல்கள் உருவாகின்றன. அரசு மருத்துவமனைகளில், முதியோர் சிகிச்சைக்காக, மாவட்டத்திற்கு 10 படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று முதியோர்களுக்கான தேசிய மருத்துவ சேவை திட்டம் (என்.பி.ஹெச்.சி.இ) பரிந்துரைக்கிறது. 24 மாநிலங்களில் முதியோர் சிகிச்சைக்காக படுக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று ஹெல்ப்பேஜ் அறிக்கை கண்டறிந்துள்ளது. உயர் ரக முதியோர் இல்லங்களில், நபர் ஒன்றுக்கு மாத கட்டணம் சுமார் ரூ.25,000 அளவுக்கு இருப்பதால், பெரும்பான்மையானவர்கள் இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. உதவிகளுடனான வாழ்க்கை முறை (மருத்துவ உதவிகளுடனான ஓய்வு காலம்) இன்றும் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்காத சூழல் உள்ளது. இந்திய மாநிலங்களில் மிக அதிகமாக, தமிழகத்தில் தான், அரசு உதவி பெறும் 80 முதியோர் இல்லங்கள் உள்ளன. அடுத்த இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 75 இல்லங்கள் உள்ளன. “அன்னியர்களை உள்ளே அனுமதிக்க மறுக்க, பாதுகாப்பு தான் முக்கிய காரணமாக உள்ளது. பராமரிப்பு அளிப்பவரின் நம்பகத்தன்மை பற்றி அவர்கள் ஏற்கும்படி செய்தால், அவர்களின் திறந்த மனோபாவம் அதிகரிக்கும். முழு நேர ஆதரவை, பேச்சுத்துணைக்கு ஒருவர் இருப்பதை முதியோர்கள் விரும்புகின்றனர் என்பதை கண்டறிந்தோம்” என்கிறார் திவாரி. நிதி நெருக்கடிகள் முதியோர்களில் பல வகையினர் உண்டு. ஓய்வூதியம், வட்டி வருமானம், வாடகை வருமானம் மூலம் வாழ்பவர்கள் மற்றும் கடைசி வரை வேலை செய்து வாழ்பவர்கள். இரண்டு பிரிவினருக்கும் உடல் ரீதியான உதவிகள் தேவை என்றாலும், இரண்டாம் பிரிவினருக்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், சமுதாயத்தின் ஆதரவு தேவை. பத்து மாநிலங்களில் முதியோர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை என்று ஹெல்ப்பேஜ் அறிக்கை கூறுகிறது. 69 முதல் 79 வயதினருக்கு அளிக்கப்படும் சராசரி மாத ஓய்வூதியம் ரூ.660 ஆகவும், 80 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு இது ரூ.534 ஆகவும் உள்ளது. பொருளாதார வளம் உடையவர்களுக்கு, தோழமை தான் அதிக முக்கிய தேவையாக உள்ளது. “பணம் பிரச்சினையில்லை. எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒருவருக்கு குடும்பம் தேவைப்படுகிறது” என்று ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ராமலிங்கம் கூறுகிறார். முதியோர் இல்லத்தில் அமைதியாக வாழும் 80 வயதான ஹிராலால், இல்லத்தில் சிறார்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் திருப்தி அடைகிறார். முதியோர்களை கைவிடும் வாரிசுகளுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கவும், பெற்றவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சொத்துகளை திரும்ப ஒப்படைக்கவும் பராமரிப்பு சட்டம் வகை செய்கிறது. ஆனால் தங்களின் பிள்ளைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் பெற்றோர்கள் அரிதாக உள்ளனர்.