கோவில்பட்டி டு சென்னைக்குத் திருட வந்த பெண்கள் பேசும் டீலிங் ஆடியோ

ஹலோ நான் வக்கீல் பேசுகிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?' என்று தொடங்குகிறது அந்த ஆடியோ. அதற்கு எதிர்முனையில் பேசுபவர், `நான் அமெரிக்காவில் இருக்கிறேன்' என்று சொல்கிறார். `அமெரிக்காவா?' என்று வக்கீல் கேட்கிறார். அப்போது பெண் ஒருவர், `லண்டனில் இருக்கிறோம்' என்று கூறுகிறார். `வண்டலூரா?' என்று வக்கீல் கேட்கிறார். பெண்: யார் நீங்கள்? வக்கீல்: வக்கீல் பேசுகிறேன். பெண்: வக்கீல் கிட்ட பேச முடியாது. முதலில் ரூபாயைப் புரட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கள். அப்போதுதான் விடுவாங்க. வக்கீல்: அதாம்மா ரூபாயை எங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கத்தான் போனில் பேசுகிறேன். எவ்வளவு ரூபாய். பெண்: முதலில் எங்க வீட்டுக்காரரிடம் போனைக் கொடுங்க... தினமும்தான் போனில் பேசிக்கிட்டு இருக்கிறோம். காலில் விழுந்து கேட்கிறேன். வக்கீல்: நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? பெண்: நாங்கள் இருக்கிறது எங்க வீட்டுக்காரர்களுக்குத் தெரியும். மூன்று நாளா பணத்தை ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார்கள். இன்னும் பணத்தைக் கொண்டு வந்து தரவில்லை. அதோடு ஆடியோ கட்டாகிவிடுகிறது. அடுத்த ஆடியோவில் வக்கீல்: எங்கதான் இருக்கிறீங்க? அப்போதுதான் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். ஆண் குரல்: நீங்கள் யாரு? வக்கீல்: நான் அட்வகேட் பாபு பேசுகிறேன். பெண்: ரூபாயைக் கொண்டுவந்து கொடுங்கள். அவரிடம் போனைக் கொடுங்கள். வக்கீல்: உங்க வீட்டுக்காரர் தள்ளி நிற்கிறார். அவர்தான் உங்களிடம் பேசச் சொன்னார். பெண்: வக்கீல் போலீஸ் கிட்ட போனால் எதுவும் நடக்காது. ரூபாயைப் புரட்ட முடியுமா? வக்கீல்: 6 லட்சம் ரூபாய் ரெடியாக இருக்கிறது. பெண்: நீங்கள் கிளம்பும்போதுதான் தகவல் சொல்வாங்க... முதலில் அவரிடம் போனைக் கொடுங்கள். வக்கீல்: நான் உங்களை எப்படிக் கண்டுபிடிக்கிறேன் பாருங்கள். இப்போது 100-க்கு போன் பண்ணுகிறேன். பெண்: நீங்கள் 100-க்கு போன் அடித்தாலும் 2000-த்துக்கு போன் அடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது. பெண்: எங்க வீட்டுக்காரரிடம் போனைக் கொடுங்கள். உங்களிடம் பேச விரும்பவில்லை. 9 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். வக்கீல்: 6 லட்சம் என்று உங்க வீட்டுக்காரர் கூறுகிறார். பெண்: 6 லட்சம் ரூபாய்க்கு உயிரோடு விடமாட்டார்கள். அடிவாங்க எங்களுக்குத் தெம்பில்லை. என்பதோடு இந்த ஆடியோ துண்டிக்கப்படுகிறது. அடுத்த மூன்றாவது ஆடியோவிலும் பேரம் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட வக்கீல் பாபுவிடம் பேசினோம். ``சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம்தான் சம்பந்தப்பட்ட பெண்கள் எனக்குத் தெரியும். என்னிடம் போனில் பேசிய பெண், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். அவரின் பெயர் காளியம்மாள். அவரின் கணவர் நாகராஜுக்குதான் காளியம்மாள் போனில் பேசி 9 லட்சம் ரூபாயைக் கேட்டுள்ளார். பணத்தைக் கொடுக்கவில்லையென்றால் எங்களை விடமாட்டார்கள் என்று தெரிவித்தார். காளியம்மாளுடன் இசக்கியம்மாள், தேவி என இரண்டு பெண்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கத்தான் பணம் கேட்டு பேரம் பேசப்பட்டது. மூன்று பெண்களையும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்களா இல்லை தனிநபரிடம் சிக்கியுள்ளார்களா என்று தெரியவில்லை. அதுகுறித்து காளியம்மாளிடம் கேட்டால் அவருடன் இருக்கும் ஆண் ஒருவர் நக்கலாகப் பதிலளிக்கிறார். காளியம்மாளோ, பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மட்டும்தான் சொல்கிறார்" என்றார். நாகராஜிடம் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதற்கிடையில் காளியம்மாள், தேவி, இசக்கியம்மாள் ஆகிய 3 பேரையும் திருட்டு வழக்கில் சென்னை போலீஸார் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மலைப்பகுதியில் காளியம்மாள், இசக்கியம்மாள், தேவி ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் மூன்று பேரும் ரயில் அல்லது பஸ் மூலம் வெளியூர்களுக்குச் சென்று திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கோவில்பட்டியிலிருந்து மூன்று பேரும் சென்னைக்கு வந்துள்ளனர். சென்னையில் மாநகர பஸ்களில் பயணித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு கிடைத்த தகவலின்படி மூன்று பேரையும் பிடித்துள்ளோம்" என்றனர். வழக்கறிஞர் பாபுவிடம் போனில் காளியம்மாள் பேசும்போது 9 லட்சம் ரூபாய் கொடுத்தால் தங்களை விட்டுவிடுவதாகக் கூறுகிறார். காளியம்மாளிடம் பணம் கேட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``திருட்டு வழக்கில் சிக்கியவர்களிடம் சம்பந்தப்பட்ட போலீஸார் பணம் எதுவும் கேட்கவில்லை. இருப்பினும் ஆடியோ ஆதாரம் இருப்பதால் அதுகுறித்து காளியம்மாளிடம் விசாரணை நடத்தப்படும்" என்றார். யார் இந்த பிக்பாக்கெட் கும்பல் என்று விசாரித்தபோது, கோவில்பட்டி புதுபஸ் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் குடியிருக்கும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலர் திருட்டுத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். அதிலும் பெண்கள்தான் பிக்பாக்கெட்டுக்காக ஊர், ஊராகச் செல்வார்கள். காலையில், போன் செய்து தாங்கள் செல்லும் இடங்களைக் கூறுவார்கள். பிறகு மாலையில் போன் செய்து பொருளை (திருடிய பொருள்களை) கொடுத்துவிடுவார்கள். இதுதான் இந்தப் பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபடுவோரின் ஸ்பெஷல் என்று தெரியவந்தது. கடந்த சனிக்கிழமை பிக்பாக்கெட் தொழிலுக்காக சென்னையிலிருந்து போன் செய்த இவர்கள் அதன்பிறகு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் பணம் பேரம் பேசப்பட்டுள்ளது. காளியம்மாளிடம் பணம் பேரம் பேசியது யார் என்று விசாரணை நடந்துவருகிறது. கோவில்பட்டியிலிருந்து திருடுவதற்காக சென்னை வந்த இசக்கியம்மாள், காளியம்மாள், தேவி ஆகியோர் போலீஸிடம் பிடிபட்டுள்ளனர். அவர்களை சென்னையில் உள்ள விடுதியில் அடைத்துவைத்து இந்தப் பேரம் நடந்துள்ளதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். பேரம் பேசியது காவல்துறையா அல்லது தனிநபரா என்பதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!