'சர்ச்சை' வீடியோ; கோர்ட்டுக்கு செல்லும் காங்.

புதுடில்லி: குமாரசாமி அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், பாஜ., தலைவர் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல காங்., முடிவு செய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக அந்த கூட்டணியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பின்னர், எடியூரப்பா தலைமையிலான பாஜ., அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா, பாஜ., நிர்வாகிகளிடம் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. அதில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் அமித்ஷா மேற்பார்வையில் தான் நடந்தது. நம்மை ஆளுங்கட்சியாக அமரவைத்த அந்த 17 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பக்கம் பாஜ., கட்சியினர் நிற்க வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து எடியூரப்பா தரப்பில் ஆட்சேபனை கூறவில்லை எனினும், கட்சியின் நலன் கருதியே பாஜ.,வினரிடம் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பணம், அதிகாரத்தை பாஜ., எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவும் எடியூரப்பாவும் செய்தது ஜனநாயகப் படுகொலைக்கான சதி என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் குற்றம் சுமத்தியுள்ளார். எடியூரப்பாவின் இந்த வீடியோ பேச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்வு காண காங்., முடிவு செய்துள்ளதாக அம்மாநில காங்., நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவில் அமித்ஷா குறித்தும் இருப்பதால் அவர், பதிலளிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜ., சார்பில் மறுப்பு தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்