தெலுங்கானாவில் அலுவலகத்திலேயே பெண் வட்டாட்சியர் எரித்துக்கொலை..! - ஒருவர் கைது

வட்டாட்சியர் அலுவலகத்திலேயே பெண் வட்டாட்சியர் பட்டப்பகலில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அப்துல்லாபர்மெத் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இன்று வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது குவாரெல்லி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, வட்டாட்சியரின் அறைக்கு சென்றார். அங்கு பெண் வட்டாட்சியரான விஜயா ரெட்டி அலுலகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருடன் சுரேஷ் சில நிமிடங்கள் பேசினார். பின்னர் சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை விஜயா ரெட்டி மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார். இதனால் தீப்பிடித்து எரிந்த விஜயா அலறித் துடித்துள்ளார். இதைக்கண்ட பணியில் இருந்தவர்கள் வட்டாட்சியரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் எரிந்து கொண்டிருந்த வட்டாட்சியர் உடல் கருகி உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச்சென்ற சுரேஷ், ஹயாத்நகர் காவல்நிலையம் அருகே பிடிபட்டார். அவரது கையில் தீக்காயங்கள் இருந்தன. அவரை கைது செய்த போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தனது இடம் தொடர்பான பிரச்னையில் அநீதி இழைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே வட்டாட்சியரை எரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். பட்டப்பகலில் வட்டாட்சியர் எரிக்கப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் சபிதா ரெட்டி, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தார். மேலும், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.