முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக்கொண்டு சில உயரதிகாரிகள் அனுமதித்தனர். இந்நிலையில், கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர், சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள ஒரு குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராகவும், பின்னர் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற தே.க.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல காவல்துறை உயரதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிபிஐ வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்பட 35 இடங்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேவேளையில், இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதனால், அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி டிசம்பர் 2ம் தேதி விசாரணை நடத்த முன்னாள் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும், ஐஜி தினகரனிடம் டிச. 3ல் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)