அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறதென்ற தகவல் பரவி, ஆளும்கட்சி வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

அயோத்தி தீர்ப்பு வரவிருப்பதால், சட்டம்–ஒழுங்கு பிரச்னை பற்றிப் பேசுவதற்காகவே ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாள்களாக அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறதென்ற தகவல் பரவி, ஆளும்கட்சி வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவ்வப்போது அமைச்சர்களை மாற்றிக்கொண்டே இருப்பார். எந்தக் காரணத்துக்காக அவர் மாற்றப்பட்டார், எதற்காக ஒருவருக்கு புதிதாகப் பதவி தரப்பட்டது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஊடகங்களிலும் கட்சி வட்டாரத்திலும் ஒரு தகவல் பேசப்படும். ஆனால், உண்மையான காரணம் வேறாக இருக்கும். கப்பம் கட்டுவதில் பொய் கணக்கு காண்பிப்பது, கட்சி வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இருப்பது என ஏதாவது ஒரு காரணம் இருக்கும். சொந்த சாதிச்சங்கம் நடத்திய பாராட்டுவிழாவில் பங்கேற்றதற்காகவும், பெண்கள் விவகாரத்தில் தவறாக நடந்ததற்காகவும்கூட அமைச்சர் பதவியிலிருந்து சிலரை அவர் நீக்கியிருப்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் அந்தந்த அமைச்சர்களும், ஜெயலலிதா, சசிகலா அண்டு கோ மட்டுமே அறிந்த ரகசியம்.மேடையில் குட்டிக்கதை சொல்வது, மற்ற அமைச்சர்களை வைத்து புகழ்பாடவைப்பது என சமீபகாலமாக எல்லா விவகாரங்களிலும் ஜெயலலிதாவின் பாணியைக் கடைபிடித்துவரும் எடப்பாடி பழனிசாமி, சில மாதங்களுக்கு முன்பு ஐ.டி துறை அமைச்சர் மணிகண்டனையும் அமைச்சரவையிலிருந்து நீக்கி அதிரடி செய்தார். ஜெயலலிதாவைப் போலவே அதற்கான காரணத்தையும் அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதற்கான எதிர்வினை பலமாக இருக்குமென்று பல தரப்பிலும் எதிர்பார்த்தனர். ஏற்கெனவே, குறிப்பிட்ட சமுதாயத்தை அவர் புறக்கணிப்பதாகவும், தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதீத முக்கியத்துவம் தருவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மணிகண்டனின் நீக்கம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென்றும் பலர் நினைத்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. செம்மலை, சண்முகநாதன், சத்யா ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படலாம். தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவி தருவதாக இருந்தால், கே.சி.கருப்பண்ணனின் பதவி பறிக்கப்படலாம். அதேபோன்று கே.சி.வீரமணியிடமிருந்து வணிக வரித்துறையைப் பறித்து சத்யாவிடம் தருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. செல்லுார் ராஜுவை நீக்கினால், குறிப்பிட்ட சமுதாய அமைச்சர்களைக் குறிவைப்பதாக பேச்சு எழும். அதனால் வேலுமணியிடம் உள்ள சிறப்பு அமலாக்கத்துறையும், தங்கமணியிடம் உள்ள எக்சைஸ் துறையும் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, வேறு யாருக்காவது தரப்படவும் வாய்ப்பிருக்கிறது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கேபிள் டி.வி தலைவர் பதவியுடன் ஐ.டி துறை, கால்நடைத்துறை எனப் பல துறைகள் தரப்பட்டுள்ளன. அதனால் அவரிடமிருந்து கால்நடைத்துறையை மட்டும் எடுத்து வேறு ஒருவருக்கு தரப்போவதாகவும் பேச்சிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும், கேபினட் கூட்டமும் முடிந்த பின்பே இந்த மாற்றங்கள் நடக்குமென்கிறார்கள். துணை முதல்வர் பன்னீர் செல்வம் அமெரிக்கா சென்றபின்பு இந்த மாற்றம் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை'' என்றார்கள். சில அமைச்சர்களை மாற்ற வேண்டுமென்று டெல்லியிலிருந்து அ.தி.மு.க தலைமைக்கு அறிவுறுத்தல் வந்திருப்பதாகவும், அதுபற்றியும் ஆளுநர்–முதல்வர் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இதுபற்றி பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ''ஒரு சில அமைச்சர்களின் ஊழல், சொத்துக்குவிப்பு பற்றி ஆளுநருக்கும் டெல்லிக்கும் எக்கச்சக்கமான புகார்கள் வந்துள்ளன. ஆனால், அவர்கள் பா.ஜ.க தலைமையுடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஒரு மாயையை இங்கு ஏற்படுத்தியிருக்கின்றனர். ஊழலை எதிர்க்கும் பா.ஜ.க-வுக்கு, இந்த ஊழல் அமைச்சர்களுடன் ஏனிந்த நெருக்கம் என்ற கேள்வியை சாமான்ய வாக்காளனும் கேட்க ஆரம்பித்துவிட்டான். இதெல்லாம் அ.தி.மு.க தலைமைக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் சொல்கிற மாற்றம் நடக்கலாம். ஆனால், ஆளுநர் சந்திப்பி்ல இதுபற்றி விவாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை'' என்றார். அமைச்சர்கள் வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தபோது, ''உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அமைச்சரவையில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால், எந்த மாதிரியான மாற்றங்கள் என்பது முதல்வர் எடப்பாடி தரப்புக்கு மட்டுமே தெரியும். அவருக்கு நெருக்கமாக இருக்கும் மூத்த அமைச்சர்களுக்கும் இதுபற்றி தெரிந்திருக்கலாம்'' என்றனர். அ.தி.மு.க-வில் அதிவிரைவில் ஏதோ நடக்கப்போகிறது... என்னவென்று அறிய நாமும் காத்திருப்போம்.