மாநகராட்சி அதிகாரிகள் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு

சென்னையில் முக்கிய சாலைகளில் நடை பாதையை ஆக்கிரமித்து நூற்றுகணக்கான பங்க் கடைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இந்த பங்க் கடைகள் அனைத்தும் தற்போது பணம் படைத்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எழும்பூரில் குழந்தைகள் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வாசல் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மட்டும் விதியை மீறி 6 பங்க்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் எழும்பூரில் மட்டும் நடைபாதையை முற்றிலும் ஆக்கிரமித்து 66 பங்க் கடைகள் செயல்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. முக்கிய சாலைகளில் விதியை மீறி செயல்பட்டு வரும் இந்த பங்க் கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 11 ந்தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடைகளை வைத்திருக்கும் ஒரிஜனல் உரிமைதாரர்களுக்கு மாநகராட்சி கடைகள் அமைப்பு அனுமதி குழு தலைவர் லாரன்ஸ் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 15 தினங்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட 3 தெருக்களில் மட்டுமே கடைகளை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக ஒரு சில கடைகளை அகற்றிய அதிகாரிகள் 50 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை 60க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி, வியாபாரிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு வருகிற 3 ந்தேதி அந்த மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதன் பின்னர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் சமாளித்தனர் இந்த நிலையில் தங்கள் கடைகளை காலி செய்வதற்காக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்ற வழக்கறிஞர் ருக்மாங்கதன் தங்களை மிரட்டுவதாக கூறி வியாபரிகள் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இது குறித்து விசாரித்த போது, நீதிமன்ற உத்தரவுபடி தங்கள் கடையை அகற்றாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் பேரம் பேசி வியாபரிகள் பணம் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த தகவலை வழக்கறிஞர் ருக்மாங்கதனிடம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற கூறியுள்ளனர் ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெறாமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து பொது நல வழக்கு தொடர்ந்தவரை பழிவாங்கும் நோக்கத்தில் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் ருக்மாங்கதன் மீது போலீசில் மிரட்டல் புகார் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. சென்னை நகரம் முழுவதுமே போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரி மாநகராட்சி ஆணையரிடம், நீதி மன்றம் அறிவுறுத்தி அனுப்பி உள்ள நிலையில் வியாபரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பொது நல வழக்கு தொடர்ந்தவரின் பெயர் விவரத்தை தெரிவித்து வியாபரிகள் மூலம் போலீசில் மிரட்டல் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.