பொள்ளாச்சி விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பொள்ளாச்சியில், இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் பொன்னாச்சியூரை சேர்ந்தவர் அருள்குமார்(28). இவர் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதியன்று, சத்தியமங்கலம் ரோட்டில் ஆம்னி வேனில் செல்லும்போது, கரியாம்பாளையம் அருகே எதிரே வந்த அரசு பஸ் ஒன்று, வேனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருள்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, இறந்த அருள்குமாரின் பெற்றோர், பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடர்ந்தனர். பின் 2017ம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பில், இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.9லட்சத்து 2600வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்வருவதாக கூறி வந்தனர். ஆனால், இரண்டு முறை நடந்த லோக் அதாலத்தின்போதும், அரசு போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராமல் இருந்துள்ளனர். இதையடுத்து, இழப்பீடு தொகை வழங்காததால், அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று, திருப்பூரிலிருந்து குருவாயூர் சென்ற ஒரு அரசு பஸ், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு வந்துள்ளது. அந்த பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் பஸ்சில் பயணித்தவர்கள் அதிலிருந்து இறங்கி, வேறு பஸ்சில் பயணித்தனர்.