அடுத்தடுத்து இருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மனுக்களை கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த பெண் ஒருவர் திடீரென தம்மிடம் இருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தேனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் கணவனை இழந்து வசித்து வரும் நிலையில், அவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து போலீசில் புகார் அளித்தும் அதனை ஏற்க காவல்துறையினர் மறுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில் மற்றொரு நபரும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பது தெரியவந்தது. அவரிடம் அரசியல் பிரமுகர் ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றி விட்டதால், மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை முயற்சிகளால் அங்கு பரபரப்பு நிலவியது.