மர்மமாக இறக்கும் இளம்பெண்கள்!- மிரளும் மயிலாடுதுறை

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டத்தில் அடிக்கடி இளம்பெண்கள் மாயமாவதும் மர்மமான முறையில் இறந்து போவதும் தொடர்ந்து நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை அருகே பரசலூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் சிவரஞ்சனி. 22 வயதான இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த 8-ம் தேதி கடைவீதியில் பொருள்களை வாங்கச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. `மகளைக் காணவில்லை' என்று செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அழுது கொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன். மணல்மேடு, சித்தமல்லியைச் சேர்ந்த கடவுள் மகள் அஜிதா. இவர் கடந்த 7-ம் தேதி வங்கியில் பணம் எடுக்கச் சென்றவர் தற்போது வரையில் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெற்றோர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருந்த வேளையில் கஞ்சாநகரம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவியைக் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார்கோயில் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுவாசல் ஊராட்சிக்குட்பட்ட செறுகடம்பூர் கிராமத்து வயலில் உள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முகத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் இருந்த அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றரீதியில் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.சித்தன் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மகள் ஆசிகா. அதே பகுதியில் உள்ள அரசு மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். வீட்டின் கொல்லைப்புறம் போனவர் வெகுநேரம் வரையில் காணவில்லை. பெற்றோர் தேடிச் சென்றபோது உடல் முழுவதும் காயங்களுடன் இறந்துகிடந்தார். `பாலியல் வன்கொடுமை செய்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' எனப் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சில மாதங்களுக்குமுன் மயிலாடுதுறையில் பள்ளி மாணவிகள் இருவர் ஆட்டோவில் சென்று ரயில் ஏறியுள்ளனர். இன்றுவரை அவர்கள் பற்றிய தகவலை அறிய முடியவில்லை. `மகளைக் காணவில்லை' என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் பெற்றோரின் எண்ணிக்கை உயர்ந்தபடியே இருக்கிறது. மயிலாடுதுறையில் இளம்பெண்கள் மாயமாவதும் மர்மமான முறையில் கொலையாவதும் தொடர்கதையாய் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மாணவிகள் மாயம் குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளத்துரையிடம் கேட்டோம். ``மாணவி அஜிதா பூம்புகார் கல்லூரியில் படிக்கும்போதே ஒருவரைக் காதலித்துள்ளார். பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரிய வந்ததும் கண்டித்துள்ளனர். அதையும்மீறி காதலனுடன் சென்றுள்ளார்.சிவரஞ்சனி வழக்கும் காதல் பிரச்னைதான். பிளஸ் டூ மாணவி ஒருவருக்குப் பக்கத்துவீட்டுப் பையனுடன் காதல். ஓடிப்போய்விட்டார். காணாமல் போன ஒரு பெண்ணை திருப்பூர் சென்று கண்டுபிடித்து ஒப்படைத்தோம். மறுபடியும் பொண்ணைக் காணவில்லை எனப் புகார் தருகிறார்கள். போலீஸால் என்ன செய்ய முடியும்... இதே வேலையாக அலைய முடியுமா. பொதுவாக இப்பகுதியில் காதல் சமாசாரம் அதிகமாக இருக்கிறது. பெற்றோர்தான் தங்கள் மகள் மீது அதிகக் கவனம் எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் போலீஸ்மீது பழி போடக் கூடாது" என்றார் கொதிப்புடன்.