கரூர் கொசுவலை நிறுவனத்தில், வரி ஏய்ப்பு'ரெய்டு' நிறைவு

கரூர்:கரூரில், கொசுவலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 435 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, தெரிய வந்துள்ளது. கரூர், ராம் நகரைச் சேர்ந்தவர், சிவசாமி, 50. இவர், 15 ஆண்டுகளுக்கு மேலாக, 'ஷோபிகா இம்பக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற, கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இங்கு தயாரிக்கப்படும், கொசுவலைகள் ரசாயனம் கலந்தவை; அதனால் அவை, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கரூர் - சேலம் பழைய சாலை, வெண்ணைமலையில், இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது.திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த, 35க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், 15ம் தேதி முதல், தலைமை அலுவலகம், சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கொசுவலை தயாரிக்கும் நிறுவனம், சிவசாமியின் வீடு உள்ளிட்ட, ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர்.நேற்று மதியம், 3:30 மணிக்கு, வருமான வரித்துறையினர், சோதனையை நிறைவு செய்தனர். இதில், வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து, கணக்கில் காட்டப்படாத, 36 கோடி ரூபாய், 10 கிலோ தங்க நகைகளை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், 435 கோடி ரூபாய் மதிப்பில், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.இதற்கான ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இந்த வார இறுதிக்குள், திருச்சி மத்திய மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தில், சிவசாமி ஆஜராகி, விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.