காகிதமில்லா சட்டமன்றம் அமைக்கும் திட்டத்துக்காக தலைமை செயலக அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது

'நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன்' (நேவா) என்ற காகிதமில்லா சட்டமன்ற திட்டம் தேசிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு சட்டசபையில் நடைமுறைப்படுத்துவதற்காக தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த பயிற்சி வகுப்பை சட்டசபை குழு கூட்ட அறையில் சபாநாயகர் ப.தனபால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- காகிதமில்லா சட்டமன்றம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் காகிதத்தின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்படும். அஞ்சலகச் செலவு போன்ற இதர செலவுகளும் குறைக்கப்படும். இதனால் பெரிய அளவில் சேமிப்பு ஏற்படுவதோடு வேகமாக செயல்படுவதற்கும் வழிவகுக்கும். எனவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், சட்டசபை கூட்டம் நடைபெறும் நாட்களில், பேரவை நிகழ்ச்சி நிரல், வினா பட்டியல், மானியக் கோரிக்கைகளின் கொள்கை விளக்க குறிப்புகள், குழுக்கூட்டங்கள் குறித்த குறிப்புகள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன. பேரவை முன் வைக்கப்பெறும் ஏடுகள் மற்றும் ஆவணங்களும் அவர்களுக்கு பி.டி.எப். வடிவில் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. எம்.எல்.ஏ.க்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், நடவடிக்கை குறிப்புகள் எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கைக்குறிப்புகள், சட்டசபை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மூலம் தமிழ்நாடு சட்டமன்ற செயலகம், காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை விரைவில் அடைய முழு ஒத்துழைப்புடன் பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் பேசுகையில், 'இந்தத் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான டன் அளவிற்கு காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்கவும் இயலும். சாதாரண நபரும் தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, சட்டமன்றம் செயல்படும் விதம் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார். இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவன ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் மிஷ்ரா, எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.விஜயகுமார், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் 'நேவா' ஒருங்கிணைப்பாளர் ஆர்பிட் தியாகி மற்றும் சமீர் வர்ஷ்னி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு