சிறப்பு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படாது, என்று கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உறுதிபடக் கூறியுள்ளார்

சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு, சிறப்பு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படாது, என்று கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உறுதிபடக் கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களாக நடை திறந்திருக்கும் நிலையில், ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொள்ள 36 பெண்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரளா தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படாது, என்று கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக செயற்பாட்டாளரான திருப்தி தேசாய் உள்ளிட்ட சில தனிநபர்கள், தங்களது பலத்தை நிரூபிக்கும் இடமாக, சபரிமலையை கருத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.