காரில் போலீஸ் ஸ்டிக்கர்’ - போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் காவல் ஆய்வாளர் எனக் கூறி போலியாக வலம் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து டாடா சுமோ காரை பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலை பகுதியில் வசித்து வருபவர் செல்வகணேஷ். இவர் ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக சிஎஸ்ஐ கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜயகணேஷ் என்பவரிடமிருந்த டாடா சுமோ வாகனத்தை விலைக்கு வாங்கி, போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியும், கூம்பு விளக்குகள், வாக்கிடாக்கி போன்ற மின் சாதனங்கள் அமைத்தும் ஆய்வாளர் என்ற பெயரில் வலம் வந்துள்ளார். மேலும் இவர் பழனி சாலை, திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுபவர் போல சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் போலி இன்ஸ்பெக்டராக நடித்து வலம் வந்த செல்வகணேஷை கைது செய்தனர். மேலும் அவரின் டாடா சுமோ காரையும், செய்தியாளர் அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.