தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்டு பெல் ஊழியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டன. முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்களித்து வாக்கு எந்திரத்தினை சோதனை செய்தனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5 சதவீத இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்களை அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதிரி வாக்கை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பதட்டமான வாக்கு மையங்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், செயலி மூலம் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக்கட்சி முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது