கேங்மேன் வேலை: நேரடி ஆள்சேர்ப்பு

திண்டுக்கல்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிக்கான நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இதில் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு 1,700 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு 2.12.2019 முதல் 11.12.2019 வரை 110/22 கே.வி.ஏ. அங்குநகர் துணை மின்நிலைய வளாக பின்புறம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலுடன் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மேற்கண்ட விலாசத்தில் கீழ் குறிப்பிட்டவைகளுடன் கலந்து கொள்ள வேண்டும். புகைப்படம் அடையாள அட்டை, மாற்று சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பதிவுதாள், மதிப்பெண் பட்டியல் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி இதில் ஏதாவது ஒன்று, சாதி சான்றிதழ் (BCO/BCM/MBC/DNC/SC/SCA/ST பிரிவினர்களுக்கு மட்டும்), மாற்றுத்திறனாளி சான்று/ முன்னுரிமை வகுப்பு (Priority group) பதிவு செய்திருந்தால் மட்டும், பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று (character and conduct) இரண்டு (கடைசியாக பயின்ற கல்வி கூடத்திலிருந்து பெறப்பட்ட சான்று ஒன்று மற்றும் விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து 01.11.2019க்கு பிறகு பெறப்பட்ட சான்று மற்றொன்று), வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால் மட்டும்) ஆகிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றையும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தவறாமல் கொண்டு வந்து, அதனை சரிபார்க்கப்பட்ட பின்னர் உடற்கல்வி தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.