கடல் நீரே வாழ்வாக..... உலக மீனவர்கள் தினம்.

உலகம் முழுவதும் இன்று மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.... பரந்து விரிந்த கடலில் உயிரைப் பணையம் வைத்து மீன்களைப் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வியல் முறையையும், துயரங்களையும் உலக உணவு சுழற்சியில் அவர்களது பங்களிப்பையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..... உணவுப் பொருள் தொடங்கி ஆடம்பரப் பொருள் வரை மனிதனுக்கு கடல் அள்ளிக் கொடுக்கும் பொருட்கள்தான் எத்தனை எத்தனை... ஆழ்கடலுக்குள் சென்று விதவிதமான மீன்வகைகளைப் பிடித்துக் கொண்டு வருபவர்கள் மீனவர்கள்... மீன் உணவுகளுக்கு தமிழக மக்களிடையே எப்போதும் வரவேற்பு உண்டு. தமிழக கடற்பரப்பில் மட்டுமல்லாது ஆறுகள், அணைப்பகுதிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் பலவகையான மீன் வகைகள் கிடைக்கின்றன. மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நாட்டிலேயே நான்காவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது தமிழகம். ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீள தமிழகக் கடற்கரையை ஒட்டி 600க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. கடலில் மீன்பிடிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள், சந்திக்கும் சவால்களை உலக அரங்குக்குக் கொண்டுவரவும் அவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டும் கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஒன்றுகூடிய 40 நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் மீனவர் பேரவையை உருவாக்கினர். அந்த நாளே உலக மீனவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செய்த பின் கடல் வளம் பெருக வேண்டியும், மீன்கள் அதிகளவில் வலைகளில் சிக்க வேண்டியும் கோவில்கள், தேவாலயங்களில் கூட்டு பிராத்தனை செய்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவர்கள் இயற்கை சீற்றம், அண்டை நாடுகளின் கடற்படையினரின் அச்சுறுத்தல், திடீர் புயல், மழை என அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளோடுதான் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர் மீனவர்கள். இறால், வஞ்சிரம், கானாங்கத்தி, வெள்ளை வவ்வால், கன்வாய், வாளை என பல வகைகளில் மீன்களும் நண்டு இனங்களும் மீனவர்களின் வலைகளில் கிடைப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வசித்து வரும் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகு, விசைப் படகுகள் இன்றி இன்றும் பழமை மாறாமல் கரை வலை மீன் பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது பிரச்சனைகள் ஏற்பட்டால் வாக்கிடாக்கி மூலமாக கடற்படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது நவீன சேட்டிலைட் போன் மற்றும் ரேடியோ டெலிபோன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சவால்களைக் கடந்து மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு அதனை நுகர்வோரும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு அடிகோலும் மக்களுக்கு மீனவர்களும் நன்றி சொல்லும் நாளாக அமைகிறது இன்றைய உலக மீனவர் தினம்...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு