குற்றமில்லா நகராக்க கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அழைப்பு

தங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காதா என நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்... உள்ளாட்சி தேர்தல் வரப்போகுது, எங்கேயாவது 'டிரான்ஸ்பர்' பண்றதுக்கு பதிலா, கேட்ட இடத்திற்கு மாத்தினா நல்லா இருக்கும்' என பெட்டிஷனோடு டென்ஷனாக இருந்த போலீசார் என 'பிஸி'யாக இருக்கிறது மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம். கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018 ஜூன் 13ல் பொறுப்பேற்றார். அன்று முதல் இன்று வரை குற்றமில்லா மதுரை நகரை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அது எந்த அளவில் உள்ளது என்பது குறித்து தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: * குற்றமில்லா நகராக மதுரை மாறுவது எப்போது? குற்றங்கள் நடக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தவிர, நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க பல யுக்திகளை கையாண்டு வருகிறோம். ரோந்து பணியுடன் தற்போது 'டெல்டா' எனும் கண்காணிப்பு வாகனங்கள் நகர் முழுவதும் ரோந்து வருவதாலும், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்களுடன் இணைந்து பொருத்தி வருவதாலும் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர பொதுமக்களின் குறைகளை தீர்க்க வார்டுக்கு ஒரு எஸ்.ஐ.,யை நியமித்துள்ளோம். * கொலைகள் அதிகரித்து வருகிறதே? ஒரு கொலையில் 15 பேர் வரை ஈடுபடுகின்றனர். பிறகு பழிக்குப்பழியாக அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இதை தடுப்பதற்காக உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி வருகிறோம். இரண்டாண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் எழுதி வாங்கி உள்ளோம். உறுதிமொழியை மீறுவோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். 80 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம். இந்தாண்டு நடந்த 39 பேர் கொலையில் அனைத்து வழக்குகளிலும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். * விரிவாக்க பகுதிகளில் குற்றங்கள் குறையவில்லையே? அப்போதைய மதுரை நகருக்கு ஏற்ப 3 ஆயிரம் போலீசார் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். தற்போது விரிவாக்க பகுதிகளும் சேர்ந்துள்ளதால்குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசார்நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நகரில் உள்ள சில ஸ்டேஷன்களில் இருந்து போலீசார்விரிவாக்க பகுதிகளுக்கு இடமாற்றப்பட்டனர். * நகரில் 25 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இது போதுமானதா? தல்லாகுளம், அண்ணாநகர் ஸ்டேஷன்களை பிரித்து புதிதாக திருப்பாலை, மாட்டுத்தாவணி போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட உள்ளன. அதேபோல் அவனியாபுரம், எஸ்.எஸ்., காலனி ஸ்டேஷன்களை பிரித்து அனுப்பானடி, கோச்சடை ஸ்டேஷன்களை உருவாக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் போலீசார் நகருக்கு கிடைப்பர். * போக்குவரத்து விதிமீறல்களை மீறுவது சர்வசாதாரணமாகி விட்டதே? போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்றுவது இல்லை. இந்தாண்டு விதிகளை மீறியதற்காக 3 லட்சத்து 91 ஆயிரத்து 292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியே 69 லட்சத்து 27 ஆயிரத்து 115 அபராதம் விதிக்கப்பட்டது. நகரில் வாகனங்களின் ஓவர் ஸ்பீடு அதிகம். அதை கட்டுப்படுத்த ரோட்டின் நடுவே 'சென்டர் மீடியன்' அமைத்து வருகிறோம். இதன்காரணமாக விபத்து, உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. * கேமராக்களின் 'கண்காணிப்பில்' மதுரை நகர் முழுவதும் வர சாத்தியம் உண்டா? நகரில் 9 ஆயிரம் தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவுக்கும் 2 கேமராக்களை பொருத்தினாலே போதும். அவரவர் வீட்டிற்கு கேமரா பொருத்துவோர் தங்கள் தெருவுக்கும் சேர்த்து பொருத்தினால் நல்லது. தற்போதைக்கு நகரில் 10 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொடும் என நம்புகிறோம். அதற்காக குடியிருப்போர் சங்கங்களிடம் பேசி வருகிறோம். குற்றமில்லா மதுரை நகரை உருவாக்க மக்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது? பொதுமக்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும். 'நமக்கென்ன, நாம நல்லா இருந்தா போதும்' என எண்ணுவதை விடுத்து சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் குற்றமில்லா மதுரை நகரை அவர்கள் ஒத்துழைப்புடன் உருவாக்க முடியும்.இவ்வாறு கூறினார். தகவல் தெரிவிக்கலாம் மதுரை நகர் போலீசாருக்கு குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (83000 21100) தகவல் தெரிவிக்கலாம். பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு எஸ்.ஓ.எஸ்., என்ற செயலி மூலம் போலீசை அணுகலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)