அடகுக்கு கார் கொடுத்த நபரை கடத்திச்சென்று பணம் கேட்ட கும்பல்!

கோவையில் அடகுக்கு கார் கொடுத்த நபரை, கும்பல் ஒன்று கடத்திச்சென்று, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் முத்துசாமி வீதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் புதிய மற்றும் பழைய கார்களை அடகு வைத்து தரும் தொழில் செய்து வருகிறார். இவர் வாங்கும் கார்களை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவரிடம் கொடுத்து பணம் பெற்று வந்துள்ளார். இதனிடையே மணிகண்டன் அடகு வைத்த கார் ஒன்றை வேறு ஒருவர் உரிமை கொண்டாடி சதாம் உசேனிடமிருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் ஐந்து லட்சம் ரூபாய் தருமாறு மணிகண்டனிடம் சதாம் கேட்டுள்ளார். ஆனால் தம்மிடம் பணம் இல்லை என்று கூறியதால், சதாம் மற்றும் அவரது கூட்டாளிகள், மணிகண்டனை கடத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்த மணிகண்டனின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், சதாம் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.