சிவசேனா எம்.பி. மற்றும் மத்திய மந்திரியான அரவிந்த் சாவந்த் ராஜினாமா அறிவிப்பினை வெளியிட்டார்.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களை வென்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைப்பதில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஆட்சியில் சமபங்கும், சுழற்சி முறையில் 2½ ஆண்டுகளுக்கு முதல்-மந்திரி பதவியும் வழங்க வேண்டும் என சிவசேனா நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இதை ஏற்க மறுக்கும் பாரதீய ஜனதா, தேவேந்திர பட்னாவிசை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதில் உறுதியாக இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், சிவசேனா உண்மையின் பக்கம் உள்ளது. இதுபோன்ற சூழலில் மத்திய அரசில் ஏன் நான் இருக்க வேண்டும். எனது மந்திரி பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.