தமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்

ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐஏஎஸ், தமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ், நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1984-ல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் குமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல், விளையாட்டு, இளைஞா் நலன், காதி மற்றும் கைத்தறித் துறை, எரிசக்தி, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசுப் பணிக்குச் சென்றாா். அதன் பின்பு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக 2017-ம் ஆண்டு நவம்பரில் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இரு ஆண்டுகளாக ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக, தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா (65) கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பணியில் இருந்து விலகினாா். அந்தப் பதவி காலியாக இருந்த நிலையில், இப்போது ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு தமிழகத் தலைமைத் தகவல் ஆணையர் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ராஜகோபாலுக்குப் பதிலாக ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.