உலக அளவில் பேசப்படுவதற்கு தமிழ் சினிமாவுக்கும் பங்குண்டு: முதலமைச்சர்

இந்திய சினிமா உலக அளவில் பேசப்படுவதற்கு தமிழ் சினிமாவுக்கும் பங்கு உண்டு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேல்ஸ் ப்லிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த எல்கேஜி, கோமாளி, பப்பி ஆகிய 3 திரைப்படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக படங்களின் தரத்துக்கு நிகராக தமிழில் படங்கள் தற்போது தயாரிக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்திய சினிமா உலக அளவில் பேசப்படுவதற்கு தமிழ் சினிமாவுக்கும் பங்கு உண்டு என்றும் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைப்படங்கள் மூலம் மக்களை நெறிப்படுத்தியதாக தெரிவித்த முதலமைச்சர், இதேபோல் தற்போதைய இயக்குநர்களும், நடிகர் நடிகைகளும் இளைஞர்கள் நலன் கருதி, தீய கருத்துகளை பரப்பும் வகையில் படம் தயாரிக்கவோ, அத்தகைய படத்தில் நடிக்கவோ கூடாது என கேட்டுக் கொண்டார்.