கமலுக்கு இன்று அறுவை சிகிச்சை

கமல்ஹாசனின் காலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட உலோகக் கம்பியை அகற்ற இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து, அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. முறிந்த எலும்பு சேர்ந்துவிட்டதால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கம்பியை எடுத்துவிடலாம் என்று டாக்டர்கள் கூறினர். அரசியல், திரைப்படத் துறையில் வேலைப்பளு காரணமாக இந்த சிகிச்சை தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில், டாக்டர்களின் ஆலோசனைப்படி, கமலின் காலில் இருந்து கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சை 22-ம் தேதி (இன்று) செய்யப்பட உள்ளது. சிகிச்சையைத் தொடர்ந்து, சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கமல் நம்மை சந்திப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.