திருவள்ளுவரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் பாஜக: சென்னை ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு

திருவள்ளுவரை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடை, ருத்திராட்சம், விபூதி ஆகிய இந்து மத அடையாளங்களுடன் திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டதைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக பொதுச்செயலாளர் து.ரவிக்குமார், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் திருமாவளவன் பேசியதாவது:உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை இந்து மதத் துறவி என்று அடையாளப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி புதிது இல்லை என்றாலும் இப்போது சில மாதங்களாக இந்துத்துவ சக்திகள் திருவள்ளுவர் தங்களுக்கு மட்டுமே உரியவர் என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர். திருவள்ளுவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் எது என்பதை உறுதியாக யாராலும் சொல்ல முடியாது. அவரது காலம், உருவம் எல்லாமே யூகம்தான். வள்ளுவர் என்ற பெயரியிலேயே ஒரு ஜாதி உள்ளது. அவர்களும் பூணூல் அணியக் கூடியவர்கள். திருவள்ளுவரை சமணம் சொந்தம் கொண்டாடுகிறது. இஸ்லாமிய கருத்துகளும் திருக்குறளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும் சொல்கிறார்கள். திருவள்ளுவரின் காலத்துக்கு முந்தைய புத்தரின் சிந்தனைகள் திருக்குறளில் உள்ளன. எனவே, திருவள்ளுவரை புத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று எந்த மதத்தினர் சொந்தம் கொண்டாடினாலும் அதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இந்த மதங்களின் அடிப்படைத் தத்துவத்தில் ஜாதிகள் இல்லை. பிறப்பு அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை இந்த மதங்கள் கற்பிக்கவில்லை. ஆனால், இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் ஜாதி வேறுபாடுகளைக் கற்பிக்கிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை. மதம் என்ற கட்டமைப்பே இல்லாமல் வழிபாட்டு முறைகள் இருந்த காலம் அது. மனிதர்கள் அனைவரும் சமம். பிறப்பின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்று உயரிய கருத்தைச் சொன்னவர் திருவள்ளுவர். அவரது சிந்தனைகள் இந்து மதத்துக்கு எதிரானது. எனவே, அவர் இந்து துறவியாக ஒருபோதும் இருக்க முடியாது. அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட மதச்சாயம் பூசியவர்கள் மீதும், வள்ளுவரின் சிலைக்கு காவி சால்வை அணிவித்து அவமானப்படுத்தியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு அமைதியாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வள்ளுவரை அவமானப்படுத்தியவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிந்தனை செல்வன், மு.முகமது யூசுப், எஸ்.எஸ்.பாலாஜி, த.பார்வேந்தன், வி.கோ.ஆதவன், அ.அசோகன், வீர.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு