அமித் ஷாவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி!

வடகிழக்கு மாநிலமான அசாமில் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக குடியேறி இந்திய அரசின் வாக்குரிமை உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவித்து வருவவதாக மத்திய அரசு கூறி வருகிறது.இதனையடுத்து அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ள குளறுபடிகளால் பல இந்தியர்கள் அவர்களது, குடிமக்கள் அடையாளத்தை இழக்கக் கூடிய அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.அசாமில், 19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இன்று மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”இந்திய குடிமக்களின் பதிவேடு (என்.ஆர்.சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். யாரும், மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.அனைவரும் தாம் இந்தியர் என்பதை குடியுரிமை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும். அப்படி ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் என கருதப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுவர் எனத் தெரிவித்தார்.மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்களுக்கு தீர்ப்பாயத்தில் முறையிடுவதற்கு உரிமை உள்ளது. சட்டப்போராட்டம் நடத்த பொருளாதார உதவி இல்லாதவர்களுக்கு அசாம் அரசு உதவி செய்யும்.” என்று தெரிவித்தார். தேசிய குடிமக்கள் பதிவேட்டால் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதியாக்கப்படும் சூழல் ஏற்படும் என பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை ”எனது அரசாங்கம் அனுமதிக்காது” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ”மேற்கு வங்கத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது. எனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்காது. மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) எனது அரசாங்கம் அனுமதிக்காது.” என கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்