தங்கைக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அண்ணன் உயிரிழந்த சோகம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, தங்கைக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குருவம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சண்முகம் - செல்லத்தாயி தம்பதி. இவர்களின் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், 3வது மகளுக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இயற்கை உபாதைக்காக வயலுக்கு சென்ற மணப்பெண்ணின் சகோதரர் தனபால், கால் தவறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வுக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணன் உயிரிழந்த நிலையில், தங்கை திருமணமும் நின்று போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.