பாஜக மீது சிவசேனா குற்றச்சாட்டு!

மகாராஷ்ட்ராவில் புதிய அரசு அமைவதற்கு பாஜக முட்டுக்கட்டைப் போடுவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. சிவசேனா பத்திரிகையான சாம்னா-வில், வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், புதிய அரசு ஏற்படுவதற்கு முட்டுக்கட்டைப் போடும் பாஜக, டெல்லியில் இருந்து கொண்டு மகாராஷ்ட்ராவை ஆட்சி செய்ய முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ள சிவ சேனா, தான் முன்பு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக பாஜக செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளது. காபந்து முதலமைச்சராக இருக்கும் தேவேந்திர பட்னவிஸ், தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சிவ சேனா, அப்போதுதான், பிற கட்சிகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டு காலத்திற்கு தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருவதோடு, புதிய ஆட்சி அமைவதிலும் இழுபறி நீடித்து வருகிறது.