ஆழ்துளைக் கிணறை மூட கோரி போன் செய்த இளைஞர் - ராஸ்கல் என திட்டிய கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்படவில்லை என்று புகார் அளித்தவரை, ஆட்சியர் அன்பழகன் கடுமையாக எச்சரிக்கும் ஆடியோ வெளியாகி புதிய சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருக்கிறது கரூர் மாவட்ட ஆட்சிதலைவராக பொறுப்பில் உள்ள அன்பழகன் பெயருக்கேற்ற அன்பும் பண்பும் கொண்ட குணம் படைத்தவர் என்று கடந்த காலங்களில் நற்பெயர் பெற்றவர்..! நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாகுது ராசா...! என்று மனு அளித்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உடனடியாக முதியோர் உதவி தொகை வழங்கியதுடன், தனது வீட்டில் உணவு சமைத்து, மூதாட்டியின் வீட்டுக்கே எடுத்துச்சென்று இலைபோட்டு பரிமாறி அவருடன் அமர்ந்து சாப்பிட்டு தன்னை ஒரு சாமானியனாக காட்டிக் கொண்டவர் மாவட்ட ஆட்சிதலைவர் அன்பழகன்..! மூதாட்டிக்கு உதவிய காட்சியை பார்த்து, எங்க ஊரு கலெக்டர் மாதிரி ஆவதே தனது லட்சியம் என்று தேர்வில் பதில் எழுதிய பள்ளி மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து கவுரவித்ததால் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ..! பணி ஓய்வுபெற்ற தனது ஓட்டுனரை தனது இருக்கையில் அமர வைத்து கார் ஓட்டியது..!கல்லூரியில் மாணவிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்..!, ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்..!, கையில் உரை அணிந்து தூய்மை பணி..!, பள்ளிக்குழந்தைகளுடன் யோகா..! , வெயில் காலத்தில் மக்களுக்கு இலவச நீர் மோர்..! என மக்கள் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்..! இந்த நிலையில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து குழந்தை சுஜித் பலியான சம்பவத்தின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மாவட்ட நிர்வாகங்கள் மூட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. க ரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுகுறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் முறையாக பணி செய்வதில்லை என்று புகார் கூறிய இளைஞர் ஒருவரிடம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசிய அதட்டல் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கலெக்ட்டர்னா சரவணபவன் சர்வர்ன்னு... நெனச்சியா ? வைடா போனை ராஸ்கல்...! என்று எச்சரிப்பதால் அது தற்போது மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது...! அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தனிப்பட்ட விளக்கம் ஏதும் அளிக்க முன்வராத நிலையில், அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கரூர் மாவட்டத்தில் 1,930 ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதாகவும் - இதில் பயன்பாட்டில் இல்லாத 558 ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, கிராம நிர்வாக அலுவலரிடமோ, ஊராட்சி செயலரிடமோ தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், தொடர்பு கொள்ள வசதியாக தொலைபேசி எண்கள் எதையும் குறிப்பிடவில்லை. இந்த செய்தி குறிப்பு மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க கூடாது என்பதையே மறைமுகமாக சுட்டிக்காட்டி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.