மாநிலங்கள், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தகவல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரம்: நோட்டீஸ்

முன்பு பிறப்பித்த உத்தரவுக்கு உட்பட்டு காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசும், 9 மாநிலங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த 9 மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், கேரளா, ஒடிசா, கர்நாடக ஆகிய மாநிலங்கள் அடங்கும். சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோரி ஆகியோர் தகவல் ஆணையர் பணியிடங்கள் பல மாநிலங்களில் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்றும், 23,500 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுதாரருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். இந்த மனு மீது பல்வேறு உத்தரவுகளைக் கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது. அதில், ''தகவல் ஆணையர் நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். தேர்வு செய்யப்பட உள்ள தகவல் ஆணையர் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். மத்திய அரசு என்ன மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதேபோன்று மாநிலத்திலும் தகவல் ஆணையர் நியமனம் நடக்க வேண்டும்'' என உத்தரவிட்டு இருந்தது முன்னாள் அதிகாரிகள் மட்டுமின்றி, சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் குடிமக்கள், சமூகத்தில் கவுரமான இடத்தில் இருப்பவர்களைக் கூட நியமிக்கலாம் எனத் தெரிவித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இன்னும் 9 மாநிலங்கள் தலைமை ஆணையர்களை நியமிக்கவில்லை. மத்திய அரசும் தலைமைத் தகவல் ஆணையரை நியமிக்கவில்லை. இந்நிலையில், காலியாக இருக்கும் தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்பக்கோரி மனுதாரர் சார்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், "தேர்வு செய்யப்பட்ட தகவல் ஆணையர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மாநில அரசுகளும், மத்திய அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடப்பதில்லை. இன்னும் பல்வேறு மாநிலங்களில் தலைமை தகவல் ஆணையர்களும், மத்தியில் தலைமைத் தகவல் ஆணையர்களும் நியமிக்கப்படவில்லை. தகவல் ஆணையர்கள் பதவியிடம் காலியாகப் போகும் 2 மாதங்களுக்கு முன்பே நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கப் பட வேண்டும் என்று பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது'' என்பதைக் குறிப்பிட்டார். இதைக்கேட்ட நீதிபதி போப்டே தலைமையிலான அரசு, "முன்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிக்கையாக 9 மாநிலங்களும், மத்திய அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்" எனத் தெரிவித்தார்.