பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு!

பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மற்றும் அரசு குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் புதிய எஸ்பிஜி சட்டத்திருத்த மசோதவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கு SPG பாதுகாப்பு விலக்கப்பட்டதில் அரசியல் பழிவாங்கல் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் 600 முறை சோனியாகாந்தி குடும்பம் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த பயணத்தின் மூலம் எந்த ரகசியத்தை மறைத்தார்கள் எனவும் அமித் ஷா கேள்வி எழுப்பினார். நீண்ட விவாதங்களுக்கு பிறகு SPG சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது..