முதியவர்களுக்கு வந்ததே வசந்தம்! ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பு!

கோவை மாவட்டத்தில் மேலும், 21,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், இவர்களுக்கான முதல் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள், கோவை மாவட்டத்தில், 11 தாலுகாக்களில் நடத்தப்பட்டன. இதில், வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம் கோருதல் என பல்வேறு, கோரிக்கைகளுடன் மனுக்கள் பெறப்பட்டன.இவற்றை கொண்டு, தகுதியானவர்களுக்கு உதவி வழங்கும் விழாக்கள், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. குறைதீர்க்கும் முகாம்களில் வந்த மனுக்களில், ஓய்வூதியம் கோரும் முதியோரின் மனுக்கள், கணிசமானவையாக உள்ளன.உழைக்க முடியாத வயதில், வாரிசுகளும் கைவிட்ட நிலையில் இருக்கும் முதியோர் பலர், அரசு ஓய்வூதியம் கோரி, மனு கொடுத்துள்ளனர்.அவர்களில் தகுதியான, 21,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இன்னும் ஒரு வாரத்தில் தாசில்தார்கள் மூலம், ஓய்வூதிய ஆணை வழங்கப்படும்.டிசம்பர் முதல் வாரத்தில், அவரவர் வங்கி கணக்கு மூலம், ஓய்வூதியம் வரவு வைக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் ஏற்கனவே, 73,173 பேர், முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் 29.41 லட்சம் பேர், முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். 'கூடுதலாக 5 லட்சம் தகுதியான முதியோருக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்ற அரசு உத்தரவின் அடிப்படையில், புதிய ஓய்வூதியர்கள் தேர்வு செய்யப்படுவதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, 21,000 பேருக்கும் ஓய்வூதிய ஆணை வழங்குவதற்கான ஏற்பாடுகள், மாவட்டத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.