மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் - மீண்டும் முதல்வரானார் ஃபட்னாவிஸ்...!

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதலமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. யாரும் ஆட்சியமைக்க முன்வராததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க மும்முரம் காட்டின. அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து. துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்ததாகக் கூறினார். ஆனால் தேர்தலுக்கு பின்னர் சிவசேனா மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சித்தால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மகாராஷ்ராவுக்கு தேவை நிலையான ஆட்சியே தேவை, இடியாப்ப சிக்கல் நிறைந்த ஆட்சி தேவையில்லை என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.