நோயாளியை ஸ்டெச்சரில் அழைத்து செல்ல லஞ்சம் கேட்ட ஊழியர்கள்!

ஸ்டெச்சரில் அழைத்து செல்ல லஞ்சம் கேட்பதாக கூறி நோயாளியை உறவினர்கள் ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற அவலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. மதுரை இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி சாயாரி. இவர் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒவ்வொரு முறையும் அவரை சிகிச்சைக்காக ட்ரை சைக்கிளில் அவரது குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர். தமது தாயை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்டெச்சரில் அழைத்து செல்ல மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மருத்துவமனை டீன் சங்குமணியின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, சாயாரியை உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பின்னர் பேசிய அவர், நோயாளியை அவர்களது குடும்பத்தினரே தான் ட்ரை சைக்கிளில் அழைத்து வந்ததாகவும், லஞ்சம் கேட்பதாக அவர்கள் கூறும் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.