ஓபன் செய்தால் ஆன் ஆகும் கேமரா! - தவற்றை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் பிரைவசி சார்ந்த சர்ச்சைகளில் சிக்குவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் புதிதாக இப்போது ஃபேஸ்புக் iOS ஆப்-பை பயன்படுத்துவோரின் கேமரா மூலம் ஃபேஸ்புக் உளவு பார்த்திருக்கலாம் என்ற புகார்கள் எழுந்துள்ளன. ஐபோனில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும்போது கேமராவை ஃபேஸ்புக்கால் அக்சஸ் செய்ய முடிகிறது என்பதே குற்றச்சாட்டு. சர்ச்சை பெரிதாக, இதை ஃபேஸ்புக்கே ஒப்புக்கொண்டது. இதற்கு இந்த ஆப்பில் இருக்கும் ஒரு சிறிய கோளாறுதான்(bug) காரணம் என்றும் கூறியுள்ளது.முதன்முதலாக இந்தப் பிரச்னையைக் கண்டுபிடித்து ட்விட்டரில் வெளிச்சம் போட்டுக்காட்டியவர், ஜொஷுவா மேடக்ஸ். இவர்தான் ஃபேஸ்புக் பயன்படுத்தும்போது கேமரா ஓபன் ஆவதை கவனித்துள்ளார். இதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பல பேர் இது தனக்கும் நடந்ததென்று கூறியுள்ளனர்.ஏற்கெனவே ஃபேஸ்புக் தங்களது மொபைல் மைக் மூலம் பேசுவதை ஒட்டுக்கேட்டு அதை வைத்து விளம்பரங்களைக் காட்டுகிறது என்னும் தகவல்கள் பறந்துகொண்டிருக்க இப்படியான சர்ச்சையில் சிக்கியுள்ளது ஃபேஸ்புக். ஆனால், இந்த ஒட்டுக்கேட்கும் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கிறது ஃபேஸ்புக். மேலும், ஃபேஸ்புக் மக்களின் நடவடிக்கைகளைச் சரியாகக் கணிக்கிறது என்பதுதான் ஆச்சர்யம்.ஆனாலும் ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னை தொடங்கி 50 மில்லியன் கணக்குகளின் டேட்டா லீக் ஆனது வரை பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்த சர்ச்சை குறித்துப் பேசிய ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், ``இந்த ஆப்பை பயன்படுத்தும்போது நியூஸ் ஃபீட்டில் இருக்கும் படங்களை கிளிக் செய்யும்போது கேமரா தானாகவே ஆக்டிவேட் ஆகிறது. கேமரா ஓபன் ஆகிறதே தவிர எதுவும் அப்லோட் செய்யப்படுவதில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இதனால் பர்சனல் டேட்டா பறிபோகியிருக்கும் என யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.