பிரேதப்பரிசோதனை செய்யாமல் உடலை வழங்க சிபாரிசுகள் ஏற்கப்படாது

மதுரை அரசு மருத்துமனையில் பிரேதப்பரிசோதனை செய்யாமல் உடலை வழங்க அதிகளவு சிபாரிசுகள் குவிவதால், எவ்வித சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நோட்டீஸ் ஓட்டி எச்சரித்துள்ளார் டீன் சங்குமணி. தற்கொலை, விபத்து, கொலை உள்ளிட்ட (medico Legal Case) மருத்துவ சட்டம் சார்ந்த சந்தேக மரணங்கள்அடைவோர் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் சுடுகாட்டில் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது. இந்த விவரம் அறியாமல் கிராங்களில் பொதுமக்கள் உடல்களை புதைத்தோ, எரித்தோ விடுவார்கள். யாரும் புகார் தெரிவிக்காத நிலையில் அந்த சம்பவத்தில் எந்தப் பிரச்சனையும் எழாது. புகார் யாரும் தெரிவித்தால் போலீஸார் அந்த உடலை தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை செய்வார்கள். ஒருவர் தற்கொலை செய்தாலோ அல்லது சந்தேகப்படும்படி இறந்ததாலோ அவர்கள் குடும்பத்தினர் முதலில் போலீஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள். அதுபோல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து இறந்தாலும் உடல்களை மருத்துவர்கள் பிரேதப்பரிசாதனை செய்தபிறகே உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள். இதற்காக அரசுமருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் தடயஅறிவியல் (Forensic Medicine) என்ற சட்டம் சார்ந்த மருத்துவத் துறை தனியாக செயல்படுகிறது. இந்தத் துறையைச் சேர்ந்த ஒரு உதவி பேராசிரியர் தலைமையில் 2 பட்டமேற்படிப்பு மாணவர்கள், 2 மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழு, தினமும் சந்தேக மரணங்களைப் பிரேத பரிசோதனை செய்கின்றனர். பிறமாவட்ட அரசு மருத்துவமனைகளில்அங்குள்ள மருத்துவர்களே பிரேதப் பரிசோதனை செய்கின்றனர். ஒரு உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு குறைந்தப்பட்சம் ஒருமணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. நிறைய உடல்கள் வந்தால் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு தாமதமாகும். அதனால், சிலர் தெரிந்த மருத்துவர்கள், போலீஸார் மற்றும் டீனுக்கு சிபாரிசு செய்து உடனடியாக உடல்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள். ஆனால், சமீப காலமாக தற்கொலை சம்பவங்களில் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யாமலேயே வாங்குவதற்கு ஆளும்கட்சியினர், எதிர்கட்சியினர் மற்றும் உயர் அதிகாரிகள் மூலம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுப்பதாகவும், அதற்காக டீன் அலுவலகத்திற்கு சிபாரிசுகள் அதிகம் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மருத்துவமனை நிர்வாகம், 'டீன்' அலுவலகம் அருகே "மருத்துவமும் சட்டமும் சார்ந்த வழக்குகளில் (medico Legal Case) சம்பந்தப்பட்ட உடல்கள் கண்டிப்பாக பிரேதப் பரிசோதனை உண்டு. எவ்வித சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், "பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் முகம், தலை உள்ளிட்ட இயல்பான உருவம் சிதைந்த நிலையிலே உறவினர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், சிலர் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இருக்க, மருத்துவமனை நிர்வாகத்தையும், போலீஸாரையும் அரசியல் பின்னனணி கொண்டு சரிக்கட்டப்பார்ப்பார்கள். அதற்கு ஆளும்கட்சியினர், எதிர்கட்சியினர் என்று கட்சி பாரபட்சமில்லாமல் அரசியல் கட்சியினரையும் உயர் அதிகாரிகளையும் கொண்டு, மருத்துவமனை 'டீன்'களுக்கு சிபாரிசுகள் அதிகம் வரும். ஆனால், 'டீன்'கள் முடிந்தளவு சிபாரிசுகளை ஏற்க மாட்டார்கள். அதனால், அவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். அதை தவிர்க்கவே மதுரை அரசு மருத்துவமனையில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது" என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்