மெட்ரோ நிர்வாகத்தின் புதிய சேவை!

பயணிகளை ஈர்ப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல விதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு படம் பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறது மெட்ரோ ரயில் நிர்வாகம். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது செல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் wifi மூலம் இலவசமாக படம் பார்க்கும் வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் wifi-ல் கணெக்ட் செய்வதன் மூலம் இந்த வசிதிகளை பெற முடியும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் படங்கள் மற்றும் பாடல்களை இதன் மூலம் இலவசமாக கண்டு மகிழலாம்.விமானத்தில் கொடுக்கப்படும் வசதிகளை போன்று இருந்தாலும், இதில் டவுண்லோடு செய்து பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த வசதியை கொண்ட முதல் மெட்ரோ ரயில் நிர்வாகமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவெடுக்கும். இதன் மூலம் ஒரு படத்தை 5 விநாடிகளில் டவுண்லோடு செய்து விட முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வசதியை அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை செல்லும் பயணிகளுக்கு பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவர்களுக்கு இது பெரிதும் உதவும் என்று தெரிகிறது. Wi-fi சேவையை எப்படி பயன்படுத்துவது? மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தவாறு ஸ்மார்ட் போனில் Wi-fi சேவையை கணெக்ட் செய்ய வேண்டும். பிறகு அதில் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக தொடங்கப்பட்டுள்ள நெட்வர்க்கை தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதிக்காக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள செயலியை பதிவிரக்கம் செய்து அதன் மூலம் படங்களை கண்டு மகிழலாம். இதில் மேலும் ஒரு சிறப்பாக இந்த செயலியின் மூலம் படங்களை download செய்து அதை தேவையான நேரத்தில் பார்த்துக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.