தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதி அளிப்பதற்காக,தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதி அளிப்பதற்காக, 266 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நான்கு ஆண்டுகளில் பத்து லட்சம் வேளாண் மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை, ஐந்து ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளதால், உறுப்பினர்களை அணிதிரட்டுதல், நிறுவன ஒத்திசைவு, சட்டரீதியான இணக்கம், தொழில் முனைவோர் திறன், வணிக மற்றும் சந்தைப்படுத்தும் திறன், நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், "உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் தொடங்க மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவி வழங்கும் திட்டங்கள், 2019-20-ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் "நாப்கிசான்" (NABKISAN) நிதிநிறுவன உதவியுடன் செயல்படுத்த 266 கோடி ரூபாய்வரை செலவிடப்படும்" என கடந்த ஜூலை மாதம் நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் துவங்கிய ஆண்டுகளில் அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை இடைநிலை மூலதனகடன் உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு முடிந்தபிறகு, மிகக் குறைந்தவட்டியாக ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவிகிதத்துடன் இத்தொகையினை திருப்பி செலுத்தினால் போதுமானது என்றும், இதனை செயல்படுத்த தமிழக அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், 500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன், வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் 1 கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும் என்றும் இத்திட்டத்தினை செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செலுத்தும் வட்டிவிகிதம் 12 முதல் 14 சதவீதத்திலிருந்து 8 முதல் 9 சதவீதமாக குறைக்க ஏதுவாக, 166 கோடியே 70 லட்சம் ரூபாய் நாப்கிஸான் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் பங்காக வழங்கப்படும். நாப்கிஸான் நிறுவனம் தன்பங்களிப்பாக 333 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்தி, வணிகரீதியாக வளரும் வகையில், அரசு இத்திட்டத்தினை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட 266 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்துள்ளது. அரசுஅறிவித்திருக்கும் இத்திட்டத்தின் மூலம், சுமார் 1,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, 10 லட்சம் வேளாண் பெருமக்கள் 4 ஆண்டுகளில் பயன்பெறுவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)