நீதிமன்ற பெண் ஊழியர் மீது நீதிபதி தாக்குதல் ? : தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை நீதிபதி தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜே என் 1 ல் நீதிபதியாக இருப்பவர் நிலவேஸ்வரன். இவர் இன்று மாலை தனது சேம்பரில் அமர்ந்திருந்த போது அதே நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக பணிபுரியும் நாகர்கோவிலை சேர்ந்த சாரதி (38) என்ற பெண் தான் டைப் செய்த காகிதத்தை நீதிபதியிடம் கொண்டு வந்தாராம். அப்போது அதில் பிழைகள் இருந்ததாகவும் இது தொடர்பாக ஊழியர் சாரதிக்கும், நீதிபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே நீதிபதி டைப் செய்த பேப்பர் பேடை தூக்கி எறிய அது சாரதியின் இடது பின்புற தலை அருகே பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பெண் ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.