ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை.....

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ், சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து, பல்வேறு கட்சியினரும் அரசு நிதி உதவி வழங்கவேண்டும் எனவும், சுஜித் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, "திருச்சி மாவட்டத்தில் இருந்த பயன்பாட்டில் இல்லாத ஆள்துறைக் கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. வேறு ஏதேனும் ஆள்துளைக் கிணறுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் மூடப்படும்" என்றார். மேலும் பேசிய அவர், "சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என அவரது கணவர் கோரிக்கை வைத்திருந்தார். கலாமேரி 12ம் வகுப்பு முடித்திருப்பதால், அவருக்குத் தகுந்த அரசுப் பணி வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்