கமல்-ரஜினி இருவருமே “தேவை ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியிருப்பது பரபரப்பான செய்தியாக்கப்படுகிறது

ஒரு புதிய நிகழ்வுப்போக்கு வருகிறபோது ஊடகங்கள் கவனம் செலுத்துவதும், அது தொடர்பான விவாதங்களில் முனைப்புக் காட்டுவதும் இயல்புதான். இப்போது கமல்-ரஜினி இருவருமே “தேவை ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியிருப்பது பரபரப்பான செய்தியாக்கப்படுகிறது. ஆனால் இதை இருவருமாகச் சேர்ந்து அறிவிக்கவில்லை. தனித்தனியாக, நிருபர்கள் கேட்ட நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இவர்களில் யார் முதலில் இப்படிச் சொல்லியிருந்தாலும் அது பற்றி அடுத்தவரிடம் கேட்கப்பட்டிருக்கும், அதற்கேற்ப அவரும் பதில் சொல்லியிருப்பார் என்று ஊகிக்கலாம். ரஜினியின் ஆதரவுத் தளம் கிடைப்பது தனது கட்சிக்கு ஒரு பலம் என்று கமல் நினைக்கலாம். அதே போல் ரஜினியும் 4 சதவீத ஆதரவைப் பெற்றுள்ள கமலுடன் இணைந்து செயல்படுவது நல்லது என்று கணக்கிட்டிருக்கலாம். ஆனால் இருவருமே அரசியல் என்றால் அதிகாரத்திற்கு வருவது மட்டுமே என்றுதான் நினைக்கிறார்கள். முதலமைச்சராகித்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியுமா? சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளில் தலையிடுவது, தீர்வுகளுக்காகச் செயல்படுவது, மாற்றங்களுக்காகப் போராடுவது ஆகியவையும் அரசியல் ஈடுபாடுதான். “தேவை ஏற்படுமானால், தமிழகத்தின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக இணைந்து செயல்படத் தயங்கமாட்டோம்” என்று மற்ற தலைவர்கள் அறிவிப்பதில்லையா? முற்றிலும் நேர்மாறான கட்சிகள் கூட பிரச்சினைகளின் அடிப்படையில் இணைந்து செயல்பட முன்வருவதில்லையா? ஆனால் இந்த இருவருக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்? இவர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்காகவா அல்லது அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காகவா அல்லது ஊடக நிறுவனங்களுக்கே அந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா? கமலாவது சில பிரச்சினைகள் வருகிறபோது தனது கருத்தை வெளியிடுகிறார். சில பிரச்சினைகளில் மௌனமாக இருக்கிறார். ரஜினியோ பிரச்சினைகள் தொடர்பாகத் தனது நிலைப்பாடுகளைத் தெரிவிப்பதில்லை – நிருபர்கள் கேட்டாலன்றி. முக்கியமான பிரச்சினைகளில் ஏதாவது கருத்துக் கூறினால் அதை ஏற்காத பிரிவினரின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்று தயங்குகிறாரா? ஆனால் கிருஷ்ணர், அர்ஜுனர் என்று இரண்டு பேரை ஒப்பிட்டுப் பேசினாரே, அது போன்ற நேரங்களில் மட்டும் கருத்துச் சொல்கிறாரே! அண்மையில் திருவள்ளுவருக்குக் காவியுடை மாட்டிவிட்ட விவகாரம் வந்தபோது, “வள்ளுவரும் மாட்டமாட்டார் நானும் மாட்டமாட்டேன்” என்று ரஜினி சொன்னார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வள்ளுவர் மாட்டமாட்டார் என்பதற்குக் குறள்களே சாட்சி. இவர் உண்மையிலேயே மாட்டமாட்டார் என்று இனிமேலாவது நிரூபிக்கட்டும். அதுவரையில், தமிழகத்தில் அனைத்துத் தரப்பிலும் ரசிகர்களைப் பெற்றிருக்கிற இவருடைய அணுகுமுறைகள் எங்கே மாட்டிக்கொள்வாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும். -தந்தி தொலைக்காட்சியின் இன்றைய (நவ.20) 'இருவர் – மக்கள் கருத்து' சிறப்பு விவாதத்தில் நான் கூறிய கருத்துகளின் சாரம். உடன் பங்கேற்றோர்: பத்திரிகையாளர்கள் ரவீந்திரன் துரைசாமி, பிரியன். நெறியாளுகை: கார்கே. -குமரேசன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்