சென்னை மட்டுமல்ல.. டெல்டாவையும் புரட்டிப்போட்ட மழை.. பலத்த காற்று.. கடல் கொந்தளிப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவும், அதிகாலையில் இருந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலையில் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், ராயப்பேட்டை, மெரினா, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நனைந்தவாறே சென்றனர். பலத்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் விடாத அடைமழை பெய்து வருகிறது. மேடவாக்கம்,கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவும், இன்று காலையும் கனமழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனவர்கள் நாளைவரை கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.