தலைமை நீதிபதி அலுவலகம் வருமா....ஆர்.டி.ஐ., வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. ஆர்டிஐ ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் இடம்பெறும் என 2010ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமைச் செயலர் மற்றும் அதன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையின்போது, வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் நீதித்துறை அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். சமூக ஆர்வலர் சார்பில் வாதாடிய பிரசாந்த் பூஷண், அரசின் அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தனது விஷயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதில் இருந்து விலக முடியாது என குறிப்பிட்டார். நீதித்துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணிப்பில் இருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அர்த்தமாகிவிடாது என வாதிட்ட பூஷண், அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் வாதிட்டார். வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ரமணா, சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2 மணியளவில் வழங்குகிறது