காலியாக உள்ள எஸ்.பி., பதவிகள் நிரப்பப்படுமா...துரித நடவடிக்கை எடுக்க போலீசார் கோரிக்கை

காலியாக உள்ள எஸ்.பி., பதவிகளை உடனடியாக நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு,போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. புதுச்சேரி போலீஸ் துறையில் கான்ஸ்டபிளில் ஆரம்பித்து, எஸ்.பி.,க்கள் வரை, பணியிடங்களை காலத்தோடு நிரப்பாத நிலை உள்ளது. இதனால், போலீசாருக்கு பணிச் சுமை அதிகரிப்பதுடன், மன உளைச்சலும் அடைகின்றனர்.இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் எஸ்.பி.,க்கள் ரகீம், வெங்கடசாமி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இந்த இரண்டு பதவிகளை நிரப்புவதற்காக, மே மாதத்தில் பதவி உயர்வுக் குழு கூடியது. ஆனால், பதவி உயர்வுக்கான ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், எஸ்.பி.,க்கள் மோகன், கொண்டா வெங்கடேஸ்வரராவ் ஆகியோர், கடந்த ஜூன் மாதத்தில் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து, காலியாக உள்ள எஸ்.பி., பதவிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டு எஸ்.பி., பதவிகளை நிரப்புவதற்கு பதவி உயர்வுக்கான ஆணை வெளியாகாத நிலையில், காலியாக உள்ள 4 எஸ்.பி., பதவிகளை நிரப்புவதற்காக, பதவி உயர்வுக் குழு மீண்டும் கூடி முடிவு எடுத்தது. இதற்கு, முதல்வரின் ஒப்புதலை தொடர்ந்து, கவர்னரும் ஒப்புதல் அளித்தார். இருந்தபோதும், காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், பதவி உயர்வு ஆணையிடுவதில் முட்டுக்கட்டை விழுந்தது.காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்து, ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து, மூன்று வாரங்கள் கடந்து விட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகளும் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், பதவி உயர்வுக்கான ஆணை இதுவரை வெளியிடப்படவில்லை.இதற்கிடையில், காரைக்காலில் பணியாற்றிய எஸ்.பி., மாரிமுத்து, கடந்த மாதம் ஓய்வு பெற்றார். தற்போது, போலீஸ் துறையில் காலியாக உள்ள எஸ்.பி.,க்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது.பதவி உயர்வு ஆணை எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து இன்ஸ்பெக்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால், அந்த இடங்களில் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியும். இதன் தொடர்ச்சியாக, உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதால், அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனவே, எஸ்.பி., பதவிகளை இன்ஸ்பெக்டர்களை கொண்டு நிரப்புவதற்கான ஆணையை உடனடியாக வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு