ஏர்டெல்- வோடபோன் ,தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் தடுமாற்றம்...

மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன. புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன. இதையடுத்து ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம், ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அந்நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தனர். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் AGR எனப்படும் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாயையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், உரிமத்தொகை, அலைக்கற்றைக் கட்டணம் ஆகியவை அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் ஐடியா-வோடபோன் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் எந்தவொரு இந்தியத் தொழில் நிறுவனம் ஒரே காலாண்டில் இத்தகைய இழப்பை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், நிதி நிலைகளில் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. முதன்மைத் தொகை, வட்டி, அபராதத் தொகை, அபராதத்தின் மீதான வட்டி என 28 ஆயிரத்து 450 கோடி ரூபாய் அந்நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.