தேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை

புதுடில்லி:மத்திய தேர்தல் கமிஷனர் அசோக் லாவசாவின் மனைவியைத் தொடர்ந்து, அவருடைய மகன் ஆபிர் மற்றும் அவருடைய நிறுவனம், அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதா என்பது தொடர்பாக விசாரிக்கப்படுகிறது. முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவசா, 2018ல் மத்திய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்தாண்டு லோக்சபாவுக்கு நடந்த தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றை விசாரித்த, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் ஒரு கமிஷனர், இந்தப் புகார்களை நிராகரித்தனர். ஆனால், தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அசோக் லாவசாவின் மனைவி, நோவல் சிங்கால் லாவசா, வருமான வரி கணக்கு தாக்கலில் தகவல்களை மறைத்ததாக, வருமான வரித் துறை குற்றஞ்சாட்டியது. முன்னாள் வங்கி அதிகாரியான நோவல், பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். ஆனால், அந்தத் தகவல்களை மறைத்ததாக, வருமான வரித் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அசோக் லாவசாவின் மகன் ஆபிர், அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 'பெமா' எனப்படும் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ், இதை விசாரிக்கிறது. ஆபிருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரீஷியசில் இருந்து, 7.25 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பெமா சட்டத்தை மீறி, இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.