ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமர் அலுவலகம், புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. களைகட்டப் போகும் புதுடெல்லி.

டெல்லியில் பிரதமர் அலுவலகத்தை ஜனாதிபதி மாளிகை அருகே அமைப்பது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் என பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. டெல்லியில் ராஜபாதை (ராஜ்பாத்) எனப்படுவது ஜனாதிபதி மாளிகை தொடங்கி விஜய் சவுக் வழியாக இந்தியா கேட் வரையிலான 4 கி மீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் மத்திய அரசின் அலுவலகங்கள் 1911 முதல் 1931-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் கட்டப்பட்டவை. ஆங்கிலேய கட்டிடக் கலை வல்லுநர்கல் எவிட் லூட்யென்ஸ் மற்றும் ஹெர்பெட் பேகெர் ஆகியோர் இதை வடிவமைத்தனர். தற்போது இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக இப்பகுதியில் ஏராளமான புதிய கட்டிடங்களை கட்ட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை அலுகே பிரதமர் அலுவலகம், எம்.பி.களுக்கான புதிய அலுவலகம், சாத்தியமாக இருந்தால் அருங்காட்சியகத்துடன் கூடிய புதிய நாடாளுமன்றம் ஆகியவற்றை உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம். இந்த புதிய கட்டிடங்கள் அனைத்தும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கவும் யோசிக்கப்பட்டுள்ளதாம். மொத்தம் ரூ12,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் சாஸ்திரி பவன், உத்யோக் பவன், கிருஷி பவன் என தனித்தனியாக இருக்கும் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பொது மத்திய அரசு அலுவலகம் ஒன்றும் கட்டப்பட இருக்கிறதாம். அதாவது தற்போது 30 தனித்தனி கட்டிடங்களில் சுமார் 70,000 பனியாளர்கள் பணிபுரிவதை ஒரே பொது செயலகத்தை உருவாக்கி பணியாற்ற வைப்பது என்கிற அடிப்படையில் ஒரு பரிந்துரையும் இருக்கிறதாம். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இத்தகைய புதிய டெல்லிக்கான ஆலோசனைகள் படுதீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.