மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் போராட்டம்!

மகாராஷ்ட்ராவில் மழை வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை இயற்கை பேரழிவாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் இருந்து வந்த சிவசேனா, மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணியில் இருந்து விலகியது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை மத்திய அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.