தாம்பரம் அருகே ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து அடாவடி வசூலில் ஈடுபட்டதோடு, தனியே இருந்த பெண்களிடம் அத்துமீறி இருவர் கைதுய

சென்னை தாம்பரம் அருகே ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து அடாவடி வசூலில் ஈடுபட்டதோடு, தனியே இருந்த பெண்களிடம் அத்துமீறிய இருவரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். முடிச்சூர் பீமேஸ்வரர் நகர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் போன்று வேடமணிந்து வீடு, வீடாகச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் தனியே இருக்கும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிக்கவும் இந்த கும்பல் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பெண் ஒருவரை மிரட்டும்போது, அவர் கத்தி கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ஐந்து பேரையும் மடக்க முயன்றுள்ளனர். அவர்களில் 2 பேர் மட்டும் பிடிபட மற்ற மூவரும் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். கோவில் நன்கொடை, ஆதரவற்றவர்களுக்கு நன்கொடை என வீட்டுக்கு வருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறும் போலீசார், அவர்கள் மீது சந்தேகம் எழுந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்துகின்றனர்.