பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நியமனம்: ஏன்

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகளும் 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசு தேர்வுத் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத் துறை என 10 இயக்குநரகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு தலைமைத் அதிகாரிகளாக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்வாக ரீதியில் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித்துறையின் தலைமை அதிகாரியாக அத்துறையின் முதன்மைச் செயலாளர் (பிரதீப் யாதவ் ஐஏஎஸ்) உள்ளார். இந்நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். அவருக்கான பணி, அதிகாரம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நிர்வாகச் சிக்கல்களைக் களைய... ஆணையர் நியமனம் தொடர்பாக அரசுத் தரப்பில் கூறும்போது, பள்ளிக்கல்வியின் துறைகளைச் சேர்ந்த இயக்குநர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. புதிய கல்விக் கொள்கை, விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதையடுத்து சிரமங்களைத் தவிர்க்கவே பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிவுரையின்படி புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கென முதன்மை, கூடுதல், துணை செயலாளர்கள் உள்ள சூழலில் புதிதாக ஆணையர் பதவிக்கான தேவை குறித்துக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினேன். ''ஆணையர் நியமனம் அர்த்தமும் தேவையும் அற்றது. அரசு வருமானம் அனைத்தும் ஊழியர்களுக்கே செலவாகிறது என்று சொல்கின்றனர். ஆசிரியர்கள் சம்பள விவகாரத்தைக் கண்டிப்புடன் கையாளுகின்றனர். எனில் புதிதாக ஓர் ஆணையர் எதற்கு? முதன்மைச் செயலாளரின் வேலை என்ன? நீதிமன்ற வழக்குகளை மட்டும் கவனிப்பதா? முன்னர் கல்வித்துறை முழுவதற்கும் ஒரு செயலாளர் மட்டுமே இருந்தார். பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டையும் அவரே பார்த்துக்கொண்டார். ஆனால் இப்போது இருவர் இருக்கின்றனர். கொள்கை முடிவுகளை எடுப்பதும் அரசாணை வெளியிடுவதும் செயலாளரின் பணி. அதை நடைமுறைப்படுத்துவது இயக்குநர்களின் வேலை. இடையில் ஆணையர் எதற்கு? என கேள்வி எழுகிறது. அடிப்படை வசதிகளில் குறைபாடு தமிழகத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கான அடிப்படை, கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. வகுப்புக்கு ஓர் ஆசிரியர், கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி ஆசிரியர், நூலகர், தூய்மைப் பணியாளர் ஆகிய வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? ராஜாஜி காலத்திலேயே இசை ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இல்லை. கற்பித்தல் செயல்பாடுகளை முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் ஆசிரியர்களுக்கு அலுவல் பணியை அளிக்கக்கூடாது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல், எதுவும் மாறப்போவதில்லை. பொதுமக்கள், அரசிடம் கேட்பது அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு. அது இங்கு கிடைப்பதில்லை. ஆணையர், செயலாளர்களின் வீட்டுக் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர்? அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும் வசதி அவர்கள் நிர்வகிக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. கடந்த சிலகாலமாக சிறப்புத் துணைத் தேர்வை நீக்கியது, 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் என நியாயமற்ற போக்கைக் கல்வித் துறை கடைபிடிக்கிறது. இந்த ஜனநாயகத் தன்மையின்மையின் நீட்சியாகத்தான் ஆணையர் நியமனத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் கிட்டத்தட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக ஆணையர் என்ன செய்யப் போகிறார் என்று அரசுதான் சொல்ல வேண்டும்'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. இதுதொடர்பாக விளக்கம் கேட்க முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவைப் பலமுறை தொடர்பு கொண்டோம். எனினும் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அழைப்பை எடுக்கவில்லை. பல்வேறு கேள்விகள், விமர்சனங்களுக்கு மத்தியில் பதவி ஏற்றிருக்கும் ஆணையர் திறம்படச் செயல்படுவார் என்று நம்புவோம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!